உண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்கும்... மோடியை சாடிய ராகுல் காந்தி!

by Sasitharan, Nov 27, 2020, 20:17 PM IST

மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்டு, டெல்லியை நோக்கி பேரணி (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் திரண்டு நேற்று முதல் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், டெல்லிக்கு வரும் சாலைகளில் அனைத்து எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. ஹரியானா பஞ்சாப் எல்லையான சம்போ பகுதியில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். போலீசார் வஜ்ரா வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயற்சித்தனர்.

ஆனால் பலனில்லை. விவசாயிகள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு டெல்லியை நோக்கி நகர்ந்தனர். போராட்டங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு, டெல்லியை அடைந்தே தீருவது என்ற குறிக்கோளுடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு பயனாகவும், விவசாயிகளை தடுக்க முடியாமலும், தற்போது போராட்டத்துக்கு கீரின் சிக்னல் கொடுத்துள்ளது அரசு. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்துள்ளது அரசு. அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கையுடன் போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். ``இந்த போராட்டம் வெறும் ஆரம்பம்தான். விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. சத்தியத்துக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் விவசாயிகள். உண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்கும் என்பதை மோடி நியாபகம் வைத்து கொள்ள வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை