பாகிஸ்தானில் ஒரு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு பெண் ஏகே 47 ரகத் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பது எனத் தெரியாமல் சில சமயங்களில் நாம் தலையைப் பிய்த்துக் கொள்வது உண்டு. இந்த தலைவலியே வேண்டாம் எனக் கருதி சிலர் பொக்கே அல்லது பணத்தைக் கொடுத்து விடுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் ஒரு திருமணத்தின் போது மணமகனுக்கு ஏகே 47 ரகத் துப்பாக்கியைக் கொடுத்து ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில் தான் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் அதில் அஷன் தான் 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டார். திருமண மேடையில் இருக்கும் மணமகனுக்கு ஏராளமானோர் வரிசையில் வந்து நின்று பரிசுப் பொருளை கொடுக்கின்றனர். அப்போது ஒரு பெண் மேடைக்குச் சென்று மணமகனுக்கு ஏகே 47 ரகத் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்தார்.
ஆனால் அந்தத் துப்பாக்கியைப் பார்த்து மணமகனுக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக அதை அவர் வாங்கிக் கொண்டார்.நிமிட நேரத்தில் இந்த வீடியோ சமூக இணைய தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் ஏராளமான சந்தேகங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தான் மணமகனுக்குப் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று கூறி அந்தப் பெண் துப்பாக்கியைக் கொடுத்தாரா என்று சிலர் கேட்டுள்ளனர்.
இது புதிய ஒரு பாகிஸ்தான் ஸ்டைலாக இருக்கும் என்று வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். நல்லவேளை மணமகனுக்கு அன்பளிப்பாக வெடிகுண்டைக் கொடுக்கவில்லையே என்று சிலர் கிண்டலடிக்கவும் செய்தனர். என்ன ஆனாலும் இந்த வீடியோ குறித்த உண்மை நிலவரம் விரைவில் தெரியவரும் என்று கருதப்படுகிறது.