சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் வார்னர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறினர். கேப்டன் பின்ச் (114) அதிரடியாக விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்துக்கொண்டிருந்த ஸ்மித்தும் (105) தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை விளாசி அசத்தியது. 375 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணியை 308/8 ரன்களில் சுருட்டினர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்.
இதற்கிடையே, இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையப் போட்டியின்போது இந்திய அணி லேட்டாக பந்துவீசியது என்று கூறப்படுகிறது. அதன்படி காலதாமதமாக பந்து வீசியதன் காரணமாக வீரர்கள் அனைவரின் ஊதியத்தில் இருந்தும் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போட்டியில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, கடந்த சில மாதங்களாக டி20 விளையாடி வருகிறோம். நீண்ட நாள்களுக்கு பின் முழு ஒரு நாள் போட்டியில் இன்று தான் விளையாடி இருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.