பஞ்சாப், ஹரியானாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து விவசாயிகள் இன்று டெல்லி போராட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளனர். இதனால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், டெல்லியை நோக்கி பேரணி(டெல்லி சலோ) என்ற போராட்டத்தைத் தொடங்கினர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் திரண்டு டெல்லிக்குச் சென்றனர். அவர்களை டெல்லிக்கு வெளியே தடுத்து நிறுத்தியுள்ளனர். கடந்த நான்கைந்து நாட்களாக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா போராட்டக்காரர்களிடம் நேற்று(டிச.1) மூன்றாவது கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. விக்யான் பவனில் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர் பங்கேற்றனர். விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து வேளாண் அமைச்சர் தோமர் கூறுகையில், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது. மூன்று சட்டங்களிலும் பிரிவு வாரியாக ஆலோசித்து அதில் உள்ள பிரச்சனைகளை எழுத்துப்பூர்வமாக இன்று(டிச.2) அளிக்குமாறு தெரிவித்துள்ளோம். மேலும், பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறிய குழுவை அமைக்கவும் கூறியிருக்கிறோம். 4ம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை(டிச.3) நடைபெறும் என்றார்.இந்நிலையில்,மத்தியப் பிரதேசத்தில் இருந்து விவசாயிகள் இன்று டெல்லி போராட்டத்தில் பங்கேற்கச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதே போல், மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் உள்ள 23 தேயிலை உற்பத்தி தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இன்று டெல்லி போராட்டத்தில் பங்கேற்கச் செல்லவிருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால், விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.