100 கோடிக்கு மேல் பணம் வெளிநாட்டுக்கு கடத்தல் 3 அமைச்சர்கள், நடிகருக்கு சுங்க இலாகா குறி

by Nishanth, Dec 5, 2020, 16:44 PM IST

கேரளாவில் இருந்து 100 கோடிக்கு மேல் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தியது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முக்கிய நடிகர், போலீஸ் அதிகாரி உள்படப் பல முக்கிய பிரமுகர்களைச் சுங்க இலாகா ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு விசாரணை தற்போது மிக முக்கிய கட்டத்தில் உள்ளது.

முதலில் இந்த வழக்கைச் சாதாரண தங்கக் கடத்தல் வழக்காகக் கருதியே விசாரணை நடத்தப்பட்டது. சுங்க இலாகா தான் முதலில் விசாரணையைத் தொடங்கியது. ஆனால் இந்த தங்கக் கடத்தலில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது. இதன் பின்னர் இதில் ஹவாலா கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மூன்று மத்திய விசாரணை அமைப்புகளும் நடத்தி வரும் விசாரணையில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இந்த கடத்தலின் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த சில அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் பொறுப்பிலிருக்கும் உயர் அதிகாரிகள், கேரள முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் உள்படப் பல முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள அரசில் முக்கிய அதிகாரிகளைக் கையில் வைத்துக் கொண்டு பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அரசின் பல திட்டங்களில் கூட கோடிக்கணக்கில் இவர் கமிஷன் வாங்கியது தெரியவந்தது.

இதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் பெரும் உதவி செய்துள்ளார். இவ்வாறு முறைகேடாகக் கிடைக்கும் பணம் மற்றும் தங்கக் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி துபாய் உள்பட வெளிநாட்டுக்குக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து தான் தங்கம் மற்றும் ஹவாலா பணம் இந்தியாவுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குப் பெருமளவு பணம் கடத்தப்படுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது. இதை ரிவர்ஸ் ஹவாலா என்று அழைக்கின்றனர்.

இந்த கடத்தலுக்கு 3 அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சில போலீஸ் உயரதிகாரிகள், மலையாள முக்கிய நடிகர், ஒரு மத அமைப்பைச் சேர்ந்த தலைவர் உள்படப் பல முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேர்ந்து இதுவரை 100 கோடிக்கு மேல் பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்தியிருக்கலாம் எனச் சுங்க இலாகா அதிகாரிகள் கருதுகின்றனர். இதுகுறித்து சுங்க இலாகா விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. விரைவில் இவர்கள் அனைவரையும் தங்களது வலைக்குள் சிக்க வைக்கச் சுங்க இலாகாவினர் தீர்மானித்துள்ளனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை