சபரிமலையில் வரலாறு காணாத வகையில் மண்டல காலத்தில் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் மனம் குளிர ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்படும் என்றாலும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல மற்றும் காலத்தில் தரிசனம் செய்யவே பக்தர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். இதனால் மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த சீசனில் தான் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள். இதனால் தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் ஆகும். மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்தாலும் பக்தர்கள் ஒரு வினாடி கூட ஐயப்பனை தரிசிக்க முடியாத நிலையும் ஏற்படும்.
முந்தைய வருடங்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காரணமாக நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலியான சம்பவங்களும் நடந்ததுண்டு. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த மண்டல காலத்தில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதலில் வாரநாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மண்டல காலத்தில் சபரிமலைக்கு தரிசனத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் வார நாட்களில் 2,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்வதில்லை. இந்த காரணத்தால் இந்த மண்டல காலத்தில் சபரிமலை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நீண்டநேரம் போலீசாரின் தொந்தரவு இன்றி மனம் குளிர ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே பக்தர்களின் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது. கடந்த மண்டல காலத்தில் தினமும் சராசரியாக 3 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது தினமும் 15 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.