வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் நாளை நடத்தும் முழு அடைப்பு(பாரத் பந்த்) போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று(டிச.7) 12வது நாளாகப் போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக சிங்கு எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், டெல்லி - நொய்டா சாலையில் சில்லா பகுதியிலும், டெல்லி - ஹரியானாவின் திக்ரி எல்லையிலும், தன்சா, தவ்ராலா, கபாகெரே, ஜாட்டிகரா, ராஜோக்கி போன்ற எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிங்கு எல்லைக்குச் சென்று விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்கவுள்ளார். அவருடன் டெல்லி மாநில அமைச்சர்களும் செல்கிறார்கள். மேலும் அவர்கள் விவசாயிகளின் தேவைகளைக் கேட்டறிந்து உதவிகளை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சிலரும் சிங்கு எல்லைக்கு நேற்றிரவு வந்தனர். அவர்கள் இன்று விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், நாளை டிச.8ம் தேதியன்று நாடு முழுவதும் முழு அடைப்பு(பாரத் பந்த்) போராட்டம் நடத்துவதற்கு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்குக் காங்கிரஸ், திமுக, சிவசேனா, பகுஜன்சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.