காங்கிரசில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, மீண்டும் பாஜகவில் சேருகிறார். இன்று(டிச.7) அவர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசுகிறார்.திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். ஒரு வாரத்திற்கு முன்பாக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், பிரதமர் மோடியைப் படுமோசமாக விமர்சித்த நடிகை குஷ்பு, திடீரென பாஜகவில் சேர்ந்து பிரதமரைப் புகழ்ந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அவரைப் போல், தெலங்கானாவில் காங்கிரசின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த நடிகை விஜய சாந்தியும், பாஜகவுக்குத் தாவுகிறார். அவர் கடந்த மாதம், கரீம் நகர் பாஜக எம்.பி.யும் மாநில பாஜக தலைவருமான பண்டிட் சஞ்சய் குமாரை திடீரென சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரும், தெலங்கானா பாஜகவின் முக்கிய தலைவருமான கிஷான் ரெட்டி நேரடியாக விஜயசாந்தி வீட்டுக்குச் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, தெலங்கானா காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக உள்ள தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூரும், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சுகுமாரும் விஜயசாந்தியை சந்தித்துச் சமாதானப்படுத்தினர். ஆனால், அவர் சமாதானம் அடையவில்லை. தன்னை காங்கிரஸ் ஓரங்கட்டி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார். எனவே, அவர் பாஜகவில் பேரம் பேசி முடித்து விட்டார் என்பதைக் காங்கிரசார் உணர்ந்தனர். இந்நிலையில், விஜய சாந்தி நேற்று டெல்லிக்கு வந்துள்ளார். அங்கு மத்திய இணை அமைச்சர் கிஷான் ரெட்டியைச் சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இன்று(டிச.7) காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை கட்சி அலுவலகத்தில் சந்தித்து அக்கட்சியில் சேருகிறார். இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார். இதைத் தொடர்ந்து, தெலங்கானா பாஜகவில் விஜயசாந்திக்கு முக்கியப் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி ஆக்ஷன் நடிகையாக போலீஸ் வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. கடந்த 1998ம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்து அரசியலுக்கு நுழைந்தார். அதன்பிறகு, தல்லி தெலங்கானா என்ற தனிக்கட்சி தொடங்கி, தெலங்கானா தனிமாநில போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் தனது கட்சியை இணைத்தார். அந்தக் கட்சியின் சார்பில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அதன்பிறகு, அந்த கட்சியில் இருந்து விலகி 2014ல் காங்கிரசில் சேர்ந்தார். தற்போது மீண்டும் பாஜகவுக்குத் தாவியுள்ளார்.