விவசாயிகளுக்கு ஆதரவு.. வீட்டுச் சிறையில் கெஜ்ரிவால்.. துணை முதல்வர் குற்றச்சாட்டு..

by எஸ். எம். கணபதி, Dec 8, 2020, 16:27 PM IST

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகத் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 13வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் அழைப்பின் பேரில் இன்று(டிச.8) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்குக் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்பட 24 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலையில் சிங்கு பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் டெல்லி மாநில அமைச்சர்களும் சென்றனர். அங்கு விவசாயிகளின் போராட்டத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்து விட்டுத் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து வீடு திரும்பிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது போல் தெரிகிறது. ஏனெனில், வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரை சந்திக்க யாரையும் டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை. துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.இதையடுத்து, மணீஷ் சிசோடியா கூறுகையில், போராடும் விவசாயிகளை அடைப்பதற்காக டெல்லியில் உள்ள மைதானங்களைச் சிறைச்சாலைகளாக மாற்றும்படி முதல்வர் கெஜ்ரிவாலிடம் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது முதல்வரைச் சந்திக்க யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. திடீரென ஏன் இவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை. முதல்வரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்களா? என்று கேட்டார். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர், போலீசாரிடம் சண்டை போட்டு வருகின்றனர். டெல்லி போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

You'r reading விவசாயிகளுக்கு ஆதரவு.. வீட்டுச் சிறையில் கெஜ்ரிவால்.. துணை முதல்வர் குற்றச்சாட்டு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை