விவசாயிகளுடன் அமித்ஷா சந்திப்பு.. ஜனாதிபதியுடன் நாளை எதிர்க்கட்சி குழு சந்திப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 8, 2020, 16:36 PM IST

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 13வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாகனங்களுடன் திரண்டிருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் அழைப்பின் பேரில் இன்று(டிச.8) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்குக் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்பட 24 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், பல மாநிலங்களில் முழு அடைப்பு தீவிரமாக உள்ளது. பஸ், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. சட்டங்களை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என்று விவசாயிகள் பிடிவாதமாக உள்ளார்கள். அடுத்த கட்டமாக, நாளை அதே அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திடீரென போராடும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அதன்பேரில், இன்றிரவு 7 மணிக்கு அமித்ஷாவின் வீட்டில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டால், போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷாவுடன் பேச்சு நடத்தியும் பலனளிக்காவிட்டால், நாளைய பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறி.

இதற்கிடையே, விவசாயிகள் பிரச்சனைக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு, ஜனாதிபதியை நாளை(டிச.9) சந்திக்கிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்துள்ளார். கொரோனா காரணமாக, 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, ராகுல்காந்தி, சரத்பவார் மற்றும் மூவர் சென்று ஜனாதிபதியைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

You'r reading விவசாயிகளுடன் அமித்ஷா சந்திப்பு.. ஜனாதிபதியுடன் நாளை எதிர்க்கட்சி குழு சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை