முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி : கவர்னர் எச்சரிக்கை

by Balaji, Dec 8, 2020, 21:17 PM IST

பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பெரும்பாலான இடங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்படி முதல்வர் பங்கேற்ற போராட்டப் புகைப்படத்தை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப் பதிவில், குறிப்பிட்டு இது போன்ற சூழ்நிலையை பார்க்கும்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

இதை தடுக்க மருத்துவம் மற்றும் தடுப்புக் குழுவினர் தயாராக வேண்டும். இது புதுச்சேரி மக்களுக்கான முன்னெச்சரிக்கை பதிவு மட்டுமே. எனவே, பொதுமக்கள் புதுச்சேரியை பாதுகாக்கவும் தங்களை பாதுகாத்து கொள்ளவும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண் பேடியின் இந்தப்பதிவு சமூகவலைத்தளங்களில் வைராலாகி வருகிறது. ஏற்கனவே புதுவையில் கவர்னர் முதல்வர் மோதல் உலகறிந்த நிலையில் கிரண் பேடியின் இந்த வாட்ஸப் பதிவு மோதலை வலுவாக்கி வருகிறது.

You'r reading முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி : கவர்னர் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை