ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக தந்தையின் செல்போனை வாங்கிய பிளஸ் டூ படிக்கும் மகள், அதில் இருந்த காட்சிகளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனில் மாணவியின் தந்தை வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இருந்தன. இதையடுத்து விவாகரத்து கோரி அந்த மாணவியின் தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் தான் வீட்டில் இருந்தபடியே வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் பெற்றோரின் செல்போனை பயன்படுத்தித் தான் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மகளுக்கு செல்போனை கொடுத்து வம்பில் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள நாகமங்களா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கமாக அந்த மாணவி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள வீட்டில் இருந்த ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த கம்ப்யூட்டர் பழுதானது.
இதையடுத்து அவர் தன்னுடைய தந்தையிடமிருந்து செல்போனை வாங்கி பயன்படுத்த தீர்மானித்தார். செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் இருந்த காட்சிகளை பார்த்து அந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். அதில் அந்த மாணவியின் தந்தை வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச காட்சிகள் இருந்தன. உடனடியாக அந்த மாணவி தன்னுடைய தாயிடம் விவரத்தை கூறினார். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் தன்னுடைய கணவனுக்கு எதிராக போலீசில் புகார் செய்தார். தனது கணவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், விவாகரத்து வேண்டும் என்றும் அவர் புகாரில் தெரிவித்தார்.
ஆனால் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்பதற்காக கணவன் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும், ஐடி பிரிவில் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். உல்லாச காட்சிகள் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டதா, அந்த காட்சிகள் வேறு யாருக்காவது பகிரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்திய பின்னரே கணவன் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்று போலீசார் கூறினர். ஆனால் தன் கணவனுக்கு எதிராக கண்டிப்பாக வழக்கு பதிவு செய்தே தீர வேண்டும் என்று அந்த மாணவியின் தாய் கூறினார். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் குழம்பிப் போயுள்ளனர்.