திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணைக்குக் கொண்டு செல்வது குறித்து மத்திய அமலாக்கத் துறை ஆலோசித்து வருகிறது. ரவீந்திரனின் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதற்கிடையே ஸ்வப்னா கொடுத்த தகவலின் பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இவரிடம் சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர். கடந்த ஒரு வாரமாக சுங்க இலாகாவின் காவலில் இருந்த சிவசங்கர் தற்போது எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கக் கடத்தல் உள்பட சில முறைகேடான செயல்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளராக இருக்கும் ரவீந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரவீந்திரனிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது.இதன்படி கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு ஆஜராகக் கூறி ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக வேண்டிய முந்தைய நாள் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மத்திய அமலாக்கத் துறையால் அவரிடம் விசாரணை முடியாத நிலை ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் இரு வாரங்கள் கழித்து ரவீந்திரன் வீடு திரும்பினார். இதன் பிறகு கடந்த மாதம் விசாரணைக்கு ஆஜராகக் கூறி 2வது முறையாக அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் நோட்டீஸ் கிடைத்த மறுநாளே மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் 2வது முறையும் மத்திய அமலாக்கத் துறையால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.
இதன் பின்னர் கடந்த வாரம் வீடு திரும்பிய அவருக்கு நாளை (10ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகக் கூறி 3வது முறையாக மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்து. ஆனால் ரவீந்திரன் நாளையும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் எனத் தெரிகிறது. நேற்று இரவு ரவீந்திரன் உடல்நலக் குறைவு என்று கூறி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை நோட்டீஸ் கொடுத்தும் ரவீந்திரன் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் கட்ட தேர்தல் முடிவடைந்தது. நாளை இரண்டாம் கட்ட தேர்தலும், 14ம் தேதி இறுதிக் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது.
தேர்தல் சமயத்தில் முதல்வரின் செயலாளர் ரவீந்திரனிடம் விசாரணை நடத்தினால் அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என இடது முன்னணி கருதுகிறது. எனவே தேர்தல் முடியும் வரை ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றே கருதப்படுகிறது. ரவீந்திரனின் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அவர் திட்டமிட்டே விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதாகவும் காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். நாளை ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகா விட்டால் அவரை கைது செய்து கொண்டு செல்லலாமா என்பது குறித்து மத்திய அமலாக்கத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அவர் கைது செய்யப்பட்டால் அது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.