சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளது. இந்த மண்டலக் காலத்தில் நடை திறந்து 23 நாட்களில் இதுவரை ₹ 3.82 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில் ₹ 66 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் மண்டலக் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
குறிப்பாகத் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட மாநிலங்களிலிருந்து தான் பெருமளவு பக்தர்கள் சபரிமலை செல்வார்கள். 41 நாள் நடைபெறும் இந்த மண்டலக் காலத்தில் சபரிமலை பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சபரிமலையில் மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் என்றாலும், மண்டலக் காலத்தில் விரதம் இருந்து செல்வதையே பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர். மண்டலக் காலத்தில் பெரும்பாலான நாட்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து ஐயப்பனைத் தரிசிப்பது உண்டு.
ஆனால் இவ்வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை செல்லும் பக்தர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் வரை சபரிமலை செல்ல வேண்டுமென்றால் நினைத்தவுடன் சென்று திரும்பி விடலாம். ஆனால் இவ்வருடம் முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த மண்டலக் காலத்தில் தொடக்கத்தில் வார நாட்களில் 1,000 பேரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பேரும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டன.
இதையடுத்து வாரநாட்களில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை 2,000 ஆகவும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து சபரிமலை கோவில் வருமானம் இவ்வருடம் கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் மண்டலக் காலத்தில் நடை திறந்த முதல் நாள் ₹ 3.5 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் முதல் நாளில் ₹ 10 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 23 நாட்களில் கிடைத்த மொத்த வருமானம் ₹ 3.82 கோடி மட்டுமே ஆகும். கடந்த வருடம் இதே நாளில் 66 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.