விவசாயிகள் வேளாண்துறை இணையத்தளத்தை அதிக அளவில் பயன்படுத்த தமிழில் தகவல் இருக்கும் வகையில் வடிவமைக்கப் புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். தகவல்களை விவசாயிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கவும் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுவை ஆளுநர் கிரண்பேடி, வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தியுடன் வேளாண்துறை தொடர்பான பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து அவர் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ள தகவல்: தொழில்நுட்பம் தொடங்கி அனைத்து தேவையான தகவல்களையும், அரசு கொள்கை சார்ந்த விஷயங்களையும் விவசாயிகளுக்குத் தெரிவிக்க எஸ்எம்எஸ் வசதியைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.
வேளாண்துறை இணையத்தளத்தை அதிகளவில் தொடர்பு கொண்டு உரையாடும் வகையில் விவசாயிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் தமிழில் தகவல்கள் இடம்பெறும் வகையில் அவற்றை வடிவமைக்க வேண்டும்.வாரம் இருமுறை வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விவசாயிகளுடன் கட்டாயம் உரையாட வேண்டும். அத்துடன் விவசாயிகளை அணுகி தொடர்பு கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த உத்தரவு எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை வரும் ஜனவரி 20ல் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.