மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்டு, டெல்லியை நோக்கி பேரணி (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். அதில் ``உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம். வேளாண்சட்டங்களை திரும்ப பெறுவதன் மூலம் சுப்ரமணிய பாரதியாருக்கு அஞ்சலி செலுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், முக ஸ்டாலின், ``செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தது திமுக அரசு. அவரது பிறந்தநாளில் 'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. வாழ்க பாரதி புகழ்” எனத் தெரிவித்துள்ளார்.