இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி பயன்படுத்திய பழைய ஆடி காரை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது காரை வாங்கிய ஒருவர் ஒரு கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பல கோடி மதிப்புள்ள அந்த கார் பல மாதங்களாக போலீஸ் நிலையத்தில் தூசி பிடித்துக் கிடக்கிறது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியைப் போலவே தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கும் வாகனங்கள் என்றால் அலாதிப் பிரியம். ஆடி, பென்ஸ், பி எம் டபிள்யூ உட்பட ஏராளமான சொகுசு கார்களை இவர் வைத்துள்ளார். பல வருடங்கள் இவர் 'ஆடி இந்தியா'வின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்தார்.
இந்நிலையில் கோஹ்லி பயன்படுத்தி வந்த 2012ம் ஆண்டு ஆர் 8 என்ற மாடல் ஆடி கார் மும்பையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் உள்ளது. அந்தக் கார் எப்படி மும்பை போலீஸ் நிலையத்திற்குச் சென்றது என்ற விவரத்தை ஒரு தேசிய பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஆடியின் புதிய ஆர் 8 மாடல் வந்தவுடன் அதை வாங்கிய கோஹ்லி, பழைய மாடல் காரை ஒரு புரோக்கர் மூலம் சாகர் தக்கர் என்பவருக்கு விற்பனை செய்தார். சாகர் தக்கர் தன்னுடைய காதலிக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்காக 2.5 கோடி கொடுத்து அந்த காரை கோஹ்லியிடமிருந்து வாங்கினார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாகர் தக்கர் ஒரு கிரிமினல் வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய ஆவணம் என்பதால் அவரது காரை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அந்தக் காரை விற்பனை செய்தது தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோஹ்லியின் வசம் இருந்தால் அவருக்கு வேறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. கடந்த பல மாதங்களாக மும்பை போலீஸ் நிலையத்தில் கோஹ்லி பயன்படுத்திய பல கோடி மதிப்புள்ள அந்த ஆடி கார் தூசி பிடித்துக் கிடக்கிறது. இந்தக் காருடன் எடுத்த பல புகைப்படங்களை கோஹ்லி சமூக இணையதளங்களில் பல முறை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.