வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தன்னுடைய கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் நாளை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.
எல்லா பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிவடைந்தன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவது மத்திய அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது: நம் நாட்டின் விவசாயிகளுக்காக நாளை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளேன். ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் நாளை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று சில பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். விவசாயிகளும் தேசவிரோதிகள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏராளமான முன்னாள் ராணுவத்தினர், தேசிய மற்றும் சர்வதேச வீரர்கள், பாடகர்கள், கலைஞர்கள், டாக்டர்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளா? இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மீந்தர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் என்னுடைய விவசாய சகோதரர்களுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன். பஞ்சாப் அரசிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.