போராட்டம் நடத்தும் விவசாயிகள், சீனாவில் இருந்து வந்தவர்களா? பாகிஸ்தானிகளா? நக்சலைட்டுகளா? என்று பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சீனா, பாகிஸ்தான் தூண்டுதலில் விவசாயிகள் போராடுகிறார்கள் என்றும், போராட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே அளித்த பேட்டி வருமாறு: நமது விவசாயிகள் இரவு பகலாக குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறோம் என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், விவசாயிகளை தேசவிரோதிகள், பாகிஸ்தானி, காலிஸ்தானி என்று பாஜகவினர் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். விவசாயிகள் யார்? நக்சல்களா, பாகிஸ்தானியா அல்லது சீனாவில் இருந்து வந்தவர்களா?
ஏதாவது ஒன்றை முடிவு பண்ணி சொல்லுங்கள். பாகிஸ்தானில் இருந்து சர்க்கரையும், வெங்காயமும் வாங்கியவர்கள்தான் பாஜக ஆட்சியாளர்கள். இப்போது விவசாயிகளையும் பாகிஸ்தானில் இருந்து வாங்குகிறார்கள் போலும். யாராவது தொழிலாளர்களுக்காகவோ, விவசாயிகளுக்காகவோ பரிந்து பேசி விட்டால் போதும், அவர்களையும் தேசவிரோதி என்கிறார்கள். வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றால், அதை போராடுபவர்களிடம் நேரில் சென்று விளக்கி புரிய வைக்கலாமே! அதை விட்டுவிட்டு, பாஜக மந்திரிகள் கேமரா முன்னால் வீண்ஜம்பம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.