விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்கள் ஊடுருவியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் 18-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும், சட்டங்களை ரத்து செய்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். போராட்டங்களை அமைதி வழியில் விவசாயிகள் எடுத்துச் செல்கின்றனர்.
இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் என்று பலரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாகச் சமீபத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகளின் போராட்டமானது, தனது தன்மையை இழந்துவிட்டது. விவசாயிகளுடன் மாவோயிஸ்ட், நக்சல் மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் விவசாயிகளின் போராட்டத்தைத் தவறான வழியில் முன்னெடுத்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாவோயிஸ்ட்கள் சிறையில் உள்ள தங்களின் தலைவர்களை விடுவிக்க கோரி விவசாயிகளுடன் இணைந்து அவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்காமல், இந்த போராட்டத்தின் மூலம் ஆதாயம் தேடுகின்றனர் என்றார். மாவோயிஸ்ட் பிடியிலிருந்து விவசாயிகள் விலகினால் தான் வேளாண் சட்டத்தின் நன்மைகள் புரியவரும் என்றும் தெரிவித்தார்.