திருவனந்தபுரத்தில் இன்று மாலை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிரபல பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரழந்தார். இதில் மர்மம் இருப்பதாகவும், கடந்த சில மாதங்களாக தனது மகனுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததாகவும் அவரது தாயார் புகார் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் (38). இவர் பிரபல மலையாள பத்திரிகைகளிலும், தனியார் சேனல்களிலும் நிருபராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் இவர் சொந்தமாக ஒரு யூடியூப் செய்தி சேனலை தொடங்கி நடத்தி வந்தார். இந்த சேனலில் ஆளும் கட்சியை இவர் கடுமையாக தாக்கியும், குறிப்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் திருவனந்தபுரம் நேமம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்புறத்தில் இருந்து வந்த ஒரு வாகனம் பிரதீப்பின் வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இது குறித்து அறிந்ததும் நேமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தில் பிரதீப்பின் வாகனத்தின் மீது மோதிய வாகனம் குறித்து இதுவரை எந்த அடையாளமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக பிரதீப்பின் உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகனுக்கு சமூக இணையதளங்களில் கொலை மிரட்டல் வந்ததாகவும், இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது தாயார் வசந்தகுமாரி தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் பத்திரிகையாளர் இறந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சாலை விபத்தில் பத்திரிகையாளர் இறந்தது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.