நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சிறிது காலதாமதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அப்போது 17 மக்களவை உறுப்பினர்களுக்கும், 8 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாடாளுமன்ற அரங்கில் ஒவ்வொருவரின் இருக்கையிலும் கண்ணாடி தடுப்புகளும் அமைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால், இந்த முறை இந்த தொடர் நடக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி, அதில் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு அமைச்சர் ஜோஷி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், கொரோனா பரவல் நீடிப்பதாலும், விரைவில் இந்நோய்க்கு தடுப்பு மருந்து வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் நாடாளுமன்றக் குளிர் கால தொடரை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் ஒப்புதலுடன் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இறுதியில் பட்ஜெட் கூட்டத் தொடர் வழக்கம் போல் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். இது பற்றி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் தான் தலைவராக உள்ளேன். என்னிடம் அரசு கலந்தாலோசிக்கவே இல்லை என்று குற்றம்சாட்டினார். அதே போல், மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவராக உள்ள குலாம்நபி ஆசாத்திடமும் அரசு தரப்பில் ஆலோசிக்கவே இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.