கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட்டுள்ள குருவாயூர் கோவிலில் நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தரிசனம் செய்ய முயற்சித்தார். ஆனால் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அவருக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும், கேரளாவில் இன்னும் கொரோனோ தொற்று தீவிரமாக உள்ளது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் ஊழியர்களுக்கும், குருவாயூர் கோவிலில் பூசாரிகள் உட்பட ஊழியர்களுக்கும் கொரோனா பரவியது.
இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 46 பேருக்கு நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குருவாயூர் கோவில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 12ம் தேதி முதல் குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா நாயுடு நேற்று குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய வருவதாக குருவாயூர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவர் தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வந்தது. அவர் தங்குவதற்கு அறையும் தயார் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக குருவாயூர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவருக்கு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்த பாஜக தீர்மானித்தது. இதையடுத்து திருப்பதி தேவஸ்தான தலைவரின் தரிசனத்திற்கு தடைவிதிக்க கேரள அறநிலையத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுகுறித்து உடனடியாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா நாயுடுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் குருவாயூர் வருகையை ரத்து செய்தார்.