இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிங்கியா தீவிரவாத அமைப்பு திட்டம்?!

by Sasitharan, Dec 15, 2020, 18:46 PM IST

டெல்லி: இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிங்கியா இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கடந்த 13-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்யா, பீகார் மாநிலம் புத்த கயா, ஸ்ரீநகர், பஞ்சாப் போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடத்த மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோஹிங்கியா இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது.

மியன்மாரில் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணின் தலைமையில் வரும் வாரங்களில் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இந்த தாக்குதல் திட்டத்தில் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்குத் தொடர்பு உள்ளது. தாக்குதல் நடத்த வங்க தேசம் வழியாக ஒரு குழு இந்தியாவுக்குள் ஊடுருவத் திட்டமிட்டுள்ளது என்றும் இந்த தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்குச் சென்னையைச் சேர்ந்த ஒருவர் மூலமாக ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த இந்திய உளவுத்துறை, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் காவல்துறை மற்றும் மாநில புலனாய்வுப் பிரிவுகளைக் கண்காணிப்பை விரைவுபடுத்துமாறு எச்சரித்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மலேசிய நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கூறுகையில், மலேசியாவில் இத்தகைய சதித் திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்தி உண்மையா? என்று கேள்வி எழுப்பினார். மலேசியக் காவல்துறைக்கு எந்த தகவலும் வரவில்லை. காவல்துறைக்குத் தாக்குதல் பற்றித் தெரியவுமில்லை என்றார். ரோஹிங்கியா அமைப்புக்கும், ஜாகிர் நாயக்கிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை மலேசிய அரசு விளக்க வேண்டும் என்றார். ஜாகிர் நாயக்கை நாடு கடத்த கோரிய இந்திய அரசுக்கு மலேசியா என்ன பதில் சொல்லப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, ராம்கர்பால் சிங் கேள்விக்குப் பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா, இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளியான எந்த தகவலும் மலேசியக் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். தாக்குதல் தொடர்பாக மலேசிய அரசின் ஒத்துழைப்பை இந்தியா இதுவரை கேட்கவில்லை. இருப்பினும், இந்தியா தரப்பில் உதவி கேட்டால் அனைத்து உதவியும் வழங்கப்படும் என்றார். மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த விவாதம் இந்தியா- மலேசியா மட்டுமின்றி உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிங்கியா தீவிரவாத அமைப்பு திட்டம்?! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை