டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எளிய முறையில் மின்சாரம் தயாரித்து பஞ்சாப் விவசாயி வழங்கி வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்றுடன் 20-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ளதால், பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைத் தீவிரப்படுத்த ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, போராட்டம் நெடுஞ்சாலைகளில் நடைபெறுவதால், அவர்கள் பல சவால்களைச் சந்திக்கின்றனர். விவசாயிகளுக்கு மின்சாரம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. குறிப்பாக, தங்கள் செல்போன் சார்ஜ் செய்வதற்குத் தேவைப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஷா சாந்தர் தனது டிராக்டரில் உள்ள பேட்டரிகள் மூலமாக மின்சாரம் தயாரித்து செல்போன்களை சார்ஜ் செய்தார். இருப்பினும், பேட்டரிகள் தொடர்ந்து செயல்பட டிராக்டர் இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும். இச்சூழலில், மற்றொரு முயற்சியைச் சாந்தருக்கு கையில் எடுத்தார்.
அதன்படி, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகளை வரவழைத்துப் பரிசோதித்துப் பார்த்தார். இந்த முயற்சியினால் நல்ல பயன் கிடைத்தது. இதனையடுத்து, தனது தேவையைப் பூர்த்தி செய்த பின் மற்ற விவசாயிகளுக்கும் மின்சாரத்தை ஷா சாந்தர் வழங்கி வருகிறார். தொடர்ந்து, 120 சார்ஜர்களை வாங்கி வந்து தனது டிராக்டரில் அமைத்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளார். ஷா சாந்தர் முயற்சியால்,செல்போன்கள் மட்டுமில்லாமல்,மின்விளக்குகள், ஸ்பீக்கர்கள் எனப் பலவற்றை இதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.