திருமணம் செய்வதாக கூறி உடலுறவில் ஈடுபடுவது பலாத்காரமாக குற்றமமாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.திருமணத்திற்கு முன்பு நெருக்கமாக இருந்த பின்னர் பலர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்வது அதிகரித்து வருகிறது. இவர்களில் சிலர், காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி போலீசில் புகார் செய்வது உண்டு. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னை ஒரு வாலிபர் திருமணம் செய்வதாக கூறி வாக்குறுதி அளித்து, பல மாதங்கள் நெருங்கிப் பழகி உறவில் ஈடுபட்டு தற்போது பிரிந்து சென்று விட்டதாகவும், தன்னை அவர் திருமணம் செய்ய மறுப்பதால் அந்த நபர் மீது பலாத்கார புகாரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விபு பக்ரு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பக்ரு, இளம் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
நீதிபதி தன்னுடைய உத்தரவில் கூறி இருப்பது: திருமணம் செய்வதாக உறுதி அளித்த பின்னர் உடலுறவில் ஈடுபடுவதை பலாத்கார குற்றமாக கருதமுடியாது. இருவரும் நீண்ட காலமாக பரஸ்பர சம்மதத்துடன் தான் உறவு கொள்கின்றனர். அதன் பின்னர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மாதக்கணக்கில் ஒன்றாக வாழ்ந்து உடலுறவில் ஈடுபட்ட பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால் அதன்பின்னர் பலாத்கார குற்றம் சுமத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறத. இதன் மூலம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இளம் பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி பக்ரு தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.