கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. கமல்நாத் மீது ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து, சிந்தியா மூலமாக காங்கிரசில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதன்பின், காங்கிரசில் இருந்து வந்த அதே ஆட்களுக்கு பாஜகவில் சீட் கொடுத்து, அவர்களை பாஜக எம்.எல்.ஏக்களாக மாற்றியது.
மேலும், அவர்களில் பலருக்கு அமைச்சர் பதவியும் தரப்பட்டது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று(டிச.16) பாஜக கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில துணை முதல்வர் நாரோட்டம் மிஸ்ரா, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கைலாஷ் விஜய்வர்கியா பேசுகையில், இங்கு கமல்நாத் ஆட்சியை கவிழ்த்தது தர்மேந்திர பிரதான் என்று நினைக்காதீர்கள். கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்ததில் பிரதமர் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு.
நான் இது வரை இந்த செய்தியை யாரிடமும் வெளிப்படையாக சொன்னதில்லை. பிரதமர் மோடியால்தான் இங்கு கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு நமது(பாஜக) ஆட்சியைக் கொண்டு வர முடிந்தது என்று கூறினார். கைலாஷ் பேசிய காட்சி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடிதான் மத்தியப் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது என்று பாஜக முக்கிய தலைவரே ஒப்புக் கொண்டு கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.