காங்கிரசுக்கு புதிய தலைமை தேவை என்று போர்க்கொடி தூக்கிய கபில்சிபல் உள்பட 23 காங்கிரஸ் தலைவர்களுடன் 19ம் தேதி ஆலோசனை நடத்த சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். 2014 மற்றும் 2019 ல் நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று இக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சோனியா காந்தி தான் தற்காலிக தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரசுக்கு தெம்பான ஒரு புதிய தலைவர் தேவை என்று பா. சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், மூத்த தலைவர் கபில் சிபல், சசி தரூர் உள்பட சில தலைவர்கள் கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த பீகார் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடி அதிகரித்தது. இதனால் காங்கிரசுக்கு புதிய தலைமை வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுத்தது. இதுதவிர காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமான தலைவர்கள் பாஜகவுக்கு தாவ தொடங்கியதும் காங்கிரசுக்கு நெருக்கடியை அதிகரித்தது.
இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் ஏராளமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத்துக்கு முதல்வர் பதவி பறிபோனது. இதனால் மத்திய பிரதேச மாநிலத்திலும் காங்கிரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசில் போர்க்கொடி தூக்கிய 23 தலைவர்களை சந்தித்து பேச சோனியாகாந்தி திட்டமிட்டுள்ளார். நாளை மறுநாள் (19ம் தேதி) அவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தலைமை மாற்றம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.