ஜெகன் திட்டத்தை மக்கள் ஆதரித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்.. சந்திரபாபு நாயுடு சவால்..

by எஸ். எம். கணபதி, Dec 18, 2020, 09:05 AM IST

அமராவதியைக் கைவிட்டு மூன்று தலைநகர் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார்.ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியுற்றது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாகச் சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெகன் அரசு, அமராவதி திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது. புதிதாக 3 தலைநகர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதன்படி, அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும். இந்த மூன்றுமே தலைநகர்களாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அமராவதி திட்டத்தை ரத்து செய்யவும், 3 தலைநகர் உருவாக்கவும் 2 சட்ட மசோதாக்களை ஜெகன் அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. சட்டமேலவையில் தெலுங்குதேசம் உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக உள்ளதால், அங்கு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:அமராவதி தலைநகர் திட்டத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதை மாற்றக் கூடாது. ஜெகன் அரசு கொண்டு வரும் 3 தலைநகர் திட்டத்தின் மீது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் அதை ஆதரித்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.இவ்வாறு நாயுடு கூறினார்.

You'r reading ஜெகன் திட்டத்தை மக்கள் ஆதரித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்.. சந்திரபாபு நாயுடு சவால்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை