ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வென்ற 48 பாஜக கவுன்சிலர்களும், ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று பாக்கியலட்சுமி கோயிலில் சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வீழ்ந்து வருவதால், மத்தியில் ஆளும் பாஜக, மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளை மூர்க்கத்தனமாக எதிர்த்து வருகிறது.
சமீபத்தில் தெலங்கானா தலைநகரான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. தெலங்கானாவில் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் பலமிழந்து விட்டன. அதனால், அங்கு பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் 55, பாஜக 48, மஜ்லிஸ் கட்சி 44 வார்டுகளில் வென்றுள்ளன. இந்நிலையில், பாஜக கவுன்சிலர்கள் 48 பேரும் இன்று காலையில் ஐதராபாத்தில் உள்ள பாக்கியலட்சுமி கோயிலுக்கு வந்தனர். அங்கு மாநில தலைவர் பண்டி சஞ்சய் முன்னிலையில் ஒரு உறுதிமொழி எடுத்தனர்.
நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், மக்களுக்கு உண்மையாக சேவை புரிவோம் என்று அவர்கள் கோயிலில் சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ராகேஷ் ரெட்டி கூறுகையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வென்ற 48 கவுன்சிலர்களும் இன்று சாமி முன்பாக ஊழல் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். அவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.