பாலக்காடு நகரசபை அலுவலகத்தில் ஜெய்ஸ்ரீராம் பேனர் பதிலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய கொடியுடன் போராட்டம்

by Nishanth, Dec 18, 2020, 18:23 PM IST

பாலக்காடு நகரசபை அலுவலக கட்டிடத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசியக் கொடியைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தியது மேலும் பரபரப்பைப் பயன்படுத்தியது. கேரள மாநிலம் பாலக்காடு நகரசபை பாஜக வசம் உள்ளது. கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தான் முதன்முதலாக இந்த நகரசபையை பாஜக கூட்டணி கைப்பற்றியது. இந்நிலையில் இம்முறையும் பாலக்காடு நகரசபையை பாஜக கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் பாஜக பெரும்பான்மையான வார்டுகளில் வெற்றி பெற்று நகரசபையைத் தக்கவைத்துக் கொண்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் ஊர்வலமாக வந்த பாஜக மற்றும் இந்து அமைப்பினர் நகர சபை கட்டிடத்தில் வீர சிவாஜியின் படத்துடன் கூடிய ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட பெரிய பிளக்ஸ் பேனரை தொங்கவிட்டனர். நகரசபை கட்டிடத்தில் தேசியக் கொடி தவிர அரசியல் கட்சிகள் உள்பட வேறு எந்த அமைப்பின் கொடியோ பேனரோ கட்டக்கூடாது என்பதால் இதுகுறித்து பாலக்காடு நகர சபை செயலாளர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்படக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாலக்காடு போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பாலக்காடு நகரசபை அலுவலகம் முன் இந்திய தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நகரசபை கட்டிடத்தின் மேல் ஏறி தேசியக் கொடியைத் தொங்கவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி பாஜக போலீசில் புகார் செய்துள்ளது.

You'r reading பாலக்காடு நகரசபை அலுவலகத்தில் ஜெய்ஸ்ரீராம் பேனர் பதிலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய கொடியுடன் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை