கொரோனா தொற்று பரவலுக்கு பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. அக்டோபர் முதல் ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், முழுமையாக இன்னும் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே முழுமையாக ரயில் சேவை எப்போது இயங்கும் என்பது தொடர்பாக, ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் பதில் அளித்துள்ளார்.
அதில், ``பயணிகள் ரயில்சேவை எப்போது சீரடையும் என்ற உறுதியான தேதி எதையும் கூறுவது இப்போது சாத்தியமில்லை. மாநில அரசுகளுடன், ரயில்வே பொதுமேலாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த ஆலோசனையின்படியே எப்போது, எந்தெந்த இடங்களுக்கு மட்டும் ரயில்களை இயக்கலாம் என்பது தொடர்பாக முடிவெடுத்து வருகிறார்கள்.
இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்கள் இன்னும் கொரோனா அச்சத்தில் இருக்கிறார்கள். நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பயணிகள் ரயில்வே சேவை படிப்படியாகவே இயல்புநிலைக்கு வரும் என்று நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.