இந்திய வீரர்கள் கேட்ச் கோட்டை விட்டதை கிண்டலடித்த சுனில் கவாஸ்கர்

by Nishanth, Dec 18, 2020, 20:03 PM IST

கிறிஸ்துமசுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீரர்கள் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி விட்டனர் என்று இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் ஏராளமான கேட்சுகளை கோட்டை விட்டது குறித்து சுனில் கவாஸ்கர் கிண்டலாக குறிப்பிட்டார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடந்தது. 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்த இந்தியா மேலும் 11 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலியா வீரர்கள் பேட்டிங் செய்ய தொடங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இவர்களை விட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா 191 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா 53 ரன்கள் முன்னிலை பெற்றது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் அதிகபட்சமாக 73 ரன்கள் அடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக மார்னஸ் லெபுஷைன் 47 ரன்கள் எடுத்தார். இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவற விட்டனர். இந்த கேட்சுகளை பிடித்திருந்தால் இந்த ரன்கள் கூட ஆஸ்திரேலியாவால் எடுத்திருக்க முடியாது. ஆஸ்திரேலிய வீரர் லெபுஷைன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு ஒரு கேட்ச் கொடுத்தார்.

ஆனால் அதை அவரால் பிடிக்க முடியவில்லை. இதன் பின்னர் அவர் 12 ரன்களில் இருந்த போது பும்ராவும், 20 ரன்கள் எடுத்திருந்த போது போது பிரித்வி ஷாவும் கேட்சுகளை கோட்டை விட்டனர். இது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஸ்கோரர் ஆன கேப்டன் டிம் பெய்னின் கேட்சையும் இந்திய வீரர்கள் கைவிட்டனர். அவர் 26 ரன்கள் மட்டும் எடுத்து ஆடிக்கொண்டிருந்த போது மிக எளிதான ஒரு கேட்சை மாயங்க் அகர்வால் கோட்டை விட்டார். இந்திய வீரர்கள் கேட்சுகளை தவறவிட்டது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கிண்டலடித்தார். அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்து விட்டனர்.

சாதாரண கேட்சுகளைக் கூட இந்திய வீரர்கள் தவற விட்டதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது. இந்திய வீரர்கள் இப்போதே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி விட்டனர் போல தோன்றுகிறது என்று கூறினார். இதற்கிடையே இன்று இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே இன்றும் பிரித்வி ஷா மிக மோசமாக ஆடினார். அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

You'r reading இந்திய வீரர்கள் கேட்ச் கோட்டை விட்டதை கிண்டலடித்த சுனில் கவாஸ்கர் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை