நடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி அப்ரூவர் ரகசிய வாக்குமூலம்

by Nishanth, Dec 19, 2020, 17:40 PM IST

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடும் சர்ச்சைக்கு இடையே தற்போது இந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தனி நீதிமன்றம் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாகப் பாதிக்கப்பட்ட நடிகை புகார் கூறினார். நடிகை மட்டுமில்லாமல் அரசுத் தரப்பிலும் இதே புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு வாரங்கள் விசாரணையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற மறுத்துவிட்டது. விசாரணை நீதிமன்றத்தை மாற்றுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காசர்கோட்டைச் சேர்ந்த விபின் லால் என்பவர் அப்ரூவராக மாறினார். இவர் நடிகைக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லத் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் நடிகைக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லக்கூடாது என்று அவரை மிரட்டியதாகக் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப்குமார் என்பவர் மீது புகார் கூறப்பட்டது இதையடுத்து பிரதீப்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அப்ரூவர் விபின்லாலிடமிருந்து ரகசிய வாக்குமூலம் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி வரும் 21ம் தேதி அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading நடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி அப்ரூவர் ரகசிய வாக்குமூலம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை