மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன.
இதையடுத்து, விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் தோமர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். 8 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில், ``குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒரு போதும் கைவிடாது என்பதை உறுதி அளிக்கிறேன். பிரதமர் மோடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று விவசாயிகள் நலன் காப்பது.புதிய பண்ணைச் சட்டங்களால் விவசாய நிலங்கள் பறிக்கப்படும் என்பது பொய். அப்படி சிலர் பொய் பரப்புரை செய்கிறார்கள். விவசாயிகள் இதனை நம்ப வேண்டாம். நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கிடையில் தான் வளர்ந்திருக்கிறேன்." என்பது போன்று பேசியிருந்தார்.
இந்த கடிதம் தற்போது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரதமர் மோடி அதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், ``வேளாண் துறை அமைச்சர் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்." என்று தமிழில் டுவீட் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.