பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் 2 வாலிபர்கள் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகை மன்னிப்பு கொடுத்தாலும் வழக்கை ரத்து செய்யவோ, கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்கவோ முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து 2 வாலிபர்கள் சில்மிஷம் செய்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அன்னா பென் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பின்னர் தான் வெளியுலகிற்குத் தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தனர். வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான இருவரது புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஆதில் (24) மற்றும் இர்ஷாத் (24) எனத் தெரியவந்தது. இவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையே தலைமறைவான அவர்கள், தாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், நடிகை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினர். வக்கீல் கூறியதால் தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் போலீசில் சரணடையப் போவதாகவும் அவர்கள் கூறினர்.ஆனால் இருவரையும் சரணடைய வரும் வழியிலேயே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக நடிகை அன்னா பென் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். தன்னுடைய குடும்பத்தைப் போலவே கைது செய்யப்பட்டுள்ள இருவரின் குடும்பத்தினரும் வேதனைப்படுவார்கள் என்பதால் தான் அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பதாகக் கூறியிருந்தார்.
இனி இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். நடிகை மன்னிப்பு கொடுத்து விட்டதால் இருவரையும் இந்த வழக்கில் இருந்து போலீசார் விடுவித்து விடுவார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால் நடிகை மன்னிப்பு கொடுத்தாலும் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடிகையின் தாயிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்திருப்பதாக போலீசார் கூறினர்.