மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி மேற்கு வங்கத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். மேலும், ஆளும் திரிணாமுல் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்களை பாஜகவில் சேர்த்து வருகின்றனர். இதற்கிடையே, இரு கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கொல்கத்தாவுக்குச் சென்ற போது அவர் கார் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று(டிச.19) காலை மேற்கு வங்கத்திற்குச் சென்றார். மிட்னாப்பூர், கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``மம்தாவின் ஆட்சியை திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் வெறுத்து போயுள்ளனர். இதனால் தான் கட்சி மாறுகிறார்கள். தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா மட்டுமே இருப்பார்" என்று ஆவேசமாக பேசினார்.
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பானர்ஜி பேசியிருக்கிறார். அதில், ``பாஜக ஏமாற்றும் கட்சி. அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியது தான் பாஜக கட்சி. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை ஆரம்பத்திலிருந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம். பாஜகவால் குடிமக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது. முதலில் பாஜக தனது தலைவிதியை தீர்மானிக்கட்டும். என்.பி.ஆர், என்.ஆர்.சி, சிஏஏவுக்கு எதிராக டிச.29-ல் பேரணி நடைபெறும்" எனக் கூறியுள்ளார்.