காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காஷ்மீர் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும்(பி.டி.பி) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளன. ஜம்முவில் பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும், மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதன்பின்னர், பல மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு தலைவராக விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கூட்டாக ஆலோசித்து, பி.டி.பி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்பட 7 கட்சி கூட்டணியை உருவாக்கினர். இதற்கு குப்கர் கூட்டணி என்று பெயரிடப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காஷ்மீர் பிராந்தியத்தில் 13 மாவட்டங்களில் குப்கர் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. காஷ்மீர் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 72 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் பாஜக 3 இடங்களையும் கைப்பற்றின. ஜம்முவில் பாஜக 72 இடங்களையும், தே.மா.கட்சி கூட்டணி 35 இடங்களையும் கைப்பற்றின. ஜம்முவில் 49 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் எந்த பக்கம் சேருகிறார்களோ, அந்த கட்சிதான் ஜம்மு மாவட்டக் கவுன்சில் தலைவர் பதவியைப் பிடிக்கும். மாவட்டக் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் பாஜக 75, தேசிய மாநாட்டுக் கட்சி 67, சுயேச்சைகள் 49, பி.டி.பி 27, காங்கிரஸ் 26 இடங்களில் வென்றிருக்கின்றன.