கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. கடற்கரைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது.சில மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடவும், தனுஷ்கோடி கடலில் தர்ப்பணம் மற்றும் தீர்த்தமாடவும் மக்களுக்குத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினர் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் நலன் கருதி கோயில் தீர்த்த கிணறுகளைத் திறக்கவும், தனுஷ்கோடி கடலில் தீர்த்தமாடச் அனுமதிக்க வேண்டியும் அரசியல் கட்சிகள் நூதன போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்குச் செல்ல இன்று மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் தனுஷ்கோடி சென்று வருகின்றனர்.