சீனா, அமெரிக்கா உட்பட நாடுகளில் கொரோனா தடுப்பூசி போட தொடங்கி விட்டார்கள்... இந்தியாவில் எப்போது? ராகுல் காந்தி கேள்வி,,,!

by Nishanth, Dec 23, 2020, 15:53 PM IST

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவில் எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வினியோகம் இன்னும் தொடங்கவில்லை. தற்போது எந்த தடுப்பூசி நிறுவனத்திற்கும் இந்தியாவில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரசெனக்கா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அடுத்த வாரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் பயோடேக் மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் அடுத்த 4 முதல் 6 மாதங்களில் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் சமீபத்தில் கூறியிருந்தார்.

முதல் கட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள், ராணுவத்தினர் போலீசார் உள்பட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா உள்பட பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசியை இருப்பு வைப்பது மற்றும் யார், யாருக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்பது தொடர்பாக விவரங்களைச் சேகரிக்கும் பணிகளும் தொடங்கி விட்டன.இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஒரு சில நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டரில் இன்று கூறியது: சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்பட நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடத் தொடங்கி விட்டார்கள். இதுவரை அந்த நாடுகளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. இந்தியாவில் தடுப்பூசி என்று வரும் மோடி ஜி என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

You'r reading சீனா, அமெரிக்கா உட்பட நாடுகளில் கொரோனா தடுப்பூசி போட தொடங்கி விட்டார்கள்... இந்தியாவில் எப்போது? ராகுல் காந்தி கேள்வி,,,! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை