காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, `வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது சொந்த தொகுதியான வாரணாசியிலேயே தோல்வியடைவார்’ என்று ஆருடம் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் மத்தியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
குறிப்பாக, காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் இடையே தான் அதிக போட்டி நிலவும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். ராகுல் காந்தி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மோடி, சீக்கிரமே களத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் ராகுல், `அடுத்த முறை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியிலேயை தோல்வியடைவார்’ என்று கணித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், `2014-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையா பாஜக-வுக்கு எதிரான குரல் அழுத்தமாக கேட்கிறது.
பாஜக-வுக்கு எதிரான கட்சிகளும் ஓரணியில் திரண்டு வருகின்றனர். அவர்களுடன் காங்கிரஸ் நிச்சியம் கைகோர்க்கும். பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டால், மோடி அவரது சொந்த தொகுதியான வாரணாசியிலேயே தோல்வியைத் தழுவுவார்’ என்று தெரிவித்துள்ளார்.