சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் புகழ்பெற்ற இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்கி, தாக்கரேவாக நடிக்கிறார். தாக்கரேவாக நடிப்பதில் இருக்கும் சிரமங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
நவாசுதீன் சித்திக்கி, பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது அவர் சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருவதில் நடித்து வருகிறார்.
`தாக்கரே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில், பால் தாக்கரேவாக நடிப்பவர் நவாசுதீன்தான். இந்நிலையில், பால் தாக்கரேவாக தோன்றி நடிப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது குறித்து கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் நவாசுதீன்.
இது குறித்து நவாசுதீன், `பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதிலும், அதில் நான் நடிப்பதிலும் பெரு மகிழ்ச்சிக் கொள்கிறேன். இது இந்தி மற்றும் மராத்தியில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தாக்கரேவாக நடிப்பதில் எனக்கு இருந்த மிகப் பெரிய சிரமம், பால் தாக்கரே போன்று பொது கூட்டங்களில் இலகுவாகும் சரளத்தோடு பேசுவதுதான். அவர் பேசியது போல் நடிக்க மிக கஷ்டமாகவே இருக்கிறது. ஜூன் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என நினைக்கிறேன்’ என்றார்.