கேரளாவில் முஸ்லிம் லீக் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் டிஒய்எப்ஐ தொண்டர் குத்திக் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காஞ்சங்காட்டில் இந்த சம்பவம் நேற்று இரவு நடந்தது. இந்த கொலையைக் கண்டித்து காஞ்சங்காடு பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள காஞ்சங்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக முஸ்லிம் லீக் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இரு கட்சி தொண்டர்களும் அடிக்கடி நேரடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (32) என்ற டிஒய்எப்ஐ தொண்டர் பைக்கில் தன்னுடைய வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் முஸ்லிம் லீக் கட்சியின் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் திடீரென சில முஸ்லீம் லீக் தொண்டர்கள் அப்துல் ரகுமானை சரமாரியாகத் தாக்கினர். பதிலுக்கு அவரும் தாக்கினார்.
இந்த சம்பவத்தில் அப்துல் ரகுமானுக்குக் கத்திக்குத்து விழுந்தது. மேலும் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த இர்ஷாத் என்பவருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.இது குறித்து அறிந்ததும் காஞ்சங்காடு போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். பின்னர் காயமடைந்த இருவரையும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்துல் ரகுமான் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலையைக் கண்டித்து இன்று அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.