கவர்னருடன் மோதிப் பார்க்க முடிவு... டிசம்பர் 31ம் தேதி மீண்டும் கேரள சட்டசபையை கூட்ட தீர்மானம்

by Nishanth, Dec 24, 2020, 16:50 PM IST

கவர்னருடன் மோதிப் பார்க்கக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றச் சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்குக் கேரள கவர்னர் அனுமதி மறுத்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி மீண்டும் சட்டசபையைக் கூட்ட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றக் கேரள அரசு தீர்மானித்திருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 23ம் தேதி (நேற்று) சிறப்புச் சட்டசபையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானம் கவர்னரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஆரிப் முகம்மது கான், சிறப்புச் சட்டசபை கூட்டத்தை நடத்த அனுமதி மறுத்து விட்டார். இது கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனவரி 8ம் தேதி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக சட்டசபையைக் கூட்ட என்ன அவசர தேவை இருக்கிறது என்றும், சட்டசபை என்ன காரணத்திற்காக அவசரமாகக் கூட்டப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கூறி கேரள அரசுக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார்.

ஆனால் அமைச்சரவை கூடி எடுத்த முடிவுக்கு அனுமதி மறுப்பதற்கு கவர்னருக்கு உரிமை இல்லை என்று கூறி முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதம் அனுப்பினார். இதையடுத்து கேரள கவர்னர் மற்றும் அரசு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. ஆனாலும் கவர்னரிடம் மோதல் போக்கு வேண்டாம் என்று கருதி ஜனவரி 8ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டத்திற்கு எதிரான மசோதாவை நிறைவேற்றக் கேரள அரசு தீர்மானித்து இருந்தது.இந்நிலையில் திடீரென கேரள அரசு தனது முடிவை மாற்றி டிசம்பர் 31ம் தேதி சிறப்புச் சட்டசபையைக் கூட்ட அதிரடியாகத் தீர்மானித்துள்ளது. அன்று ஒரு மணி நேரம் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கவர்னரிடம் அனுமதி கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்தவும் கவர்னர் அனுமதி மறுத்தால் அது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். கவர்னர் அனுமதி மறுத்தாலும் அதை மீறி சட்டசபை கூட்டத்தை நடத்துவது என்ற முடிவில் கேரள அரசு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனால் கேரள அரசு மற்றும் அம்மாநில கவர்னருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

You'r reading கவர்னருடன் மோதிப் பார்க்க முடிவு... டிசம்பர் 31ம் தேதி மீண்டும் கேரள சட்டசபையை கூட்ட தீர்மானம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை