திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி வைபவம் கொரோனா தடுப்பு விதிகளுடன் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.வரும் 27ம் தேதி சனிப்பெயர்ச்சி வைபவம் நடக்கிறது புகழ் பெற்ற தலமான திருநள்ளாற்றில், அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனி பகவானைத் தரிசித்துச் செல்வர். இதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரையிலான சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என, ஸ்தானிகர் சங்கத் தலைவர் நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலுக்குள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளோம். நள மற்றும் பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராடப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பாதுகாப்பு விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடத்த அனுமதி வழங்கிய நீதிபதிகள், முகக்கவசம் அணியாமல் பக்தர்கள் எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் நிபந்தனைகளை விதித்து திருவிழாவை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.