சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை...

by Nishanth, Dec 25, 2020, 10:54 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நீளும் மண்டலக் காலம் நாளை நடைபெற உள்ள மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.

கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் சபரிமலை பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மண்டலக் கால பூஜைக்கு நடை திறந்த போது தொடக்கக் கட்டத்தில் வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் தான் சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இம்முறை பெரும்பாலானோருக்குச் சபரிமலை செல்ல முடியாததால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2வது கட்டத்தில் வார நாட்களில் 2,000 பேரும், சனி, ஞாயிறுகளில் 3,000 பேரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்தி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களாக 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன் முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன் ஊர்வலமாகச் சபரிமலைக்குப் புறப்பட்டது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த தங்க அங்கி பம்பையை அடையும்.

பம்பை கணபதி கோவிலில் 3 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காகத் தங்க அங்கி வைக்கப்படும். மீண்டும் ஊர்வலமாகப் புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்து பின்னர் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும். இதன் பின்னர் தீபாராதனை நடைபெறும். நாளை பகல் 11.40க்கும் 12.20க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இதன் பின்னர் இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.

You'r reading சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை... Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை