கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து விரைவில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கில் பல அதிரடி திட்டங்களைக் கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதியம் ₹ 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 4 மாதங்களுக்கு அனைவருக்கும் பலசரக்கு பொருட்கள் இலவசமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. தொடக்கத்தில் இந்த அரசுக்கு நல்ல பெயர் இருந்தது.
ஆனால் கடந்த இரு வருடங்களுக்கு முன் சபரிமலை கோவில் விவகாரத்தில் கேரள அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இளம்பெண்களைச் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதித்த விவகாரம் தொடர்பாகக் கேரளா முழுவதும் போராட்டம் வெடித்தது. கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பாஜக உள்பட இந்த அமைப்புகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பெரும்பான்மை மக்களிடையே பினராயி விஜயன் அரசுக்குச் செல்வாக்கு இழக்கும் நிலை ஏற்பட்டது. இது அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்தது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளிலும் இடதுசாரி கூட்டணி படுதோல்வி அடைந்தது.
ஒரு தொகுதியில் மட்டுமே இக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இது ஆளும் இடது முன்னணி அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் சபரிமலை கோவில் விவகாரத்தில் பினராயி விஜயன் அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தது. இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டது அரசுக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இது தவிர முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த பலருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது இக்கட்சிக்கு அடுத்த அடியைக் கொடுத்தது. இதையடுத்து கொடியேறி பாலகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தவிரக் கேரள அரசின் பல்வேறு திட்டங்களில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த காரணங்களால் அடுத்த சட்டசபைத் தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது.
ஆனால் பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்று இடது முன்னணி சாதனை படைத்தது. இதையடுத்து அடுத்த வருடம் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இடது முன்னணிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல அதிரடியான கவர்ச்சி திட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். முதியோர் மற்றும் பல்வேறு ஓய்வூதியங்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரித்து அவர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதியோர் ஓய்வூதியம் மாதத்திற்கு ₹ 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கடந்த 3 மாதங்களாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹ 400 மதிப்புள்ள பலசரக்கு பொருள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 4 மாதங்களுக்கு இதை நீட்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.