வங்கிகளின் வாயிலில் குப்பை கொட்டி போராட்டம்.. சந்திரபாபு நாயுடு காட்டம்..

by எஸ். எம். கணபதி, Dec 26, 2020, 09:32 AM IST

ஆந்திராவில் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இது ஜெகன் மோகன் அரசின் நாகரீகமற்ற செயல் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியற்றது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் வங்கிகள் கடனுதவி அளிக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, சிறுவணிர்கள் கடன், நடைபாதை வியாபாரிகளுக்கான கடன், பெண்களுக்கான ஒய்எஸ்ஆர் சேயுதா திட்டக் கடன் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஆந்திரா வங்கி, எஸ்.பி.ஐ, சிண்டிகேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் மீது மாவட்டக் கலெக்டர் முகமது இமித்தியாஸ் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த வங்கிகளின் வாயில்களில் அதிகாலையில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடத்தப்பட்டது. சிறு வியாபாரிகள் ஆத்திரத்தில் இப்படி போராட்டம் நடத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், சந்திரபாபு நாயுடு இது ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு நடத்திய நாகரீகமற்ற செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், வங்கிகளின் முன்பாக குப்பைகளைக் கொட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாநில அரசின் தூண்டுதலில் இப்படிச் செய்திருப்பது நமது மாநிலத்தின் பெருமையைச் சீர்குலைக்கும். இந்த நாகரீகமற்ற செயலை வேறு யாராவது செய்வார்களா? என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading வங்கிகளின் வாயிலில் குப்பை கொட்டி போராட்டம்.. சந்திரபாபு நாயுடு காட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை