சுனாமி தாக்கிய 16வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தங்கள் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கூடி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளியாக பதிவானது. இந்த பூகம்பத்தின் நீட்சியாக இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு அது சுனாமியாக உருவெடுத்தது.
கடந்த 1964ம் ஆண்டில் ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் பெரும் புயல் தாக்கி, அந்த நகரமே அழிந்தது. அதற்குப் பிறகு அப்படியொரு புயல், சுனாமி தாக்குதலை மக்கள் பார்க்கவில்லை. அதனால், 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கிய போது அதற்குச் சுனாமி என்ற பெயர் உள்ளது மக்களுக்குப் பரிச்சயமானது.
சுனாமியால் சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்களில் கடல் நீர் புகுந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி என்று கடலோர மாவட்டங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆண்டுதோறும் டிசம்பர் 26ம் தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சுனாமியால் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள், அவர்களின் புகைப்படங்களைக் கடற்கரையில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடலில் பூக்கள் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்துகின்றனர்.அதே போல், இன்று சுனாமி வந்த 16வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரை மற்றும் கன்னியாகுமரி, கடலூர் கடலோர கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.