சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.கார்த்திகை மாதத்தை ஐயப்ப பக்தர்கள் புனித மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் தான் சபரிமலையில் மண்டல காலம் தொடங்குகிறது. கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் மாலை அணிந்து கடும் விரதமிருந்து பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள். ஒவ்வொரு வருடமும் 41 நாள் நீளும் இந்த மண்டலக் காலத்தில் தான் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
ஆனால் இவ்வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களால் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொரோனா பரிசோதனை நடத்தினால் மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். இதனால் மண்டல காலத்தில் கூட சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்களின் வருகை குறைந்ததால் கோவில் வருமானமும் கடுமையாகக் குறைந்துள்ளது.
இவ்வருடம் மண்டலக் காலத்தில் நடை திறந்த கடந்த 39 நாட்களில் இதுவரை மொத்தம் ₹ 9,09,14,293 மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில் 156 கோடியே 60 லட்சத்து 19 ஆயிரத்து 661 ரூபாய் வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் 5 சதவீதம் பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வந்துள்ளனர்.இந்நிலையில் இவ்வருட மண்டலக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. 41 நாள் நீண்ட மண்டலக் காலம் இன்று நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஆரன் முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட தங்க அங்கி நேற்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
இன்று மதியம் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். சபரிமலையில் இன்று வரை பக்தர்கள் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாக இருந்தது. 31ம் தேதி முதல் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.